பள்ளிகள், அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளிகள், அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆய்வு மேற்கொண்டார்
தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிங்கம்புணரி வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில், தமிழக முதலமைச்சரால் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணுகின்ற அரசு இயந்திரம் களத்திற்கு வரும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தினை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வுகளில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடை இன்றி மக்களை சென்றடைவது உறுதி செய்திடும் வகையில் தமிழக முதலமைச்சரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அரசு முதல் நிலை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உரிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தங்களது துறை ரீதியாக வட்டளவில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் அ.காளாப்பூர் ஊராட்சி பகுதியில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் (PMKY) 2023-2024 ன் கீழ் அங்கக வேளாண் செயல் விளக்கத்திடலில் இயற்கை உரம் தயாரித்தல் முறை குறித்தும், துணை சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் மாணாக்கர்களின் கற்றல் முறை தொடர்பாகவும், ஆர் டி 108 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நியாய விலை கடையின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிமை பொருட்களின் தரம், இருப்பு நிலை உள்ளிட்டவைகள் தொடர்பாகவும், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் கற்பித்தல் முறை ஆகியன குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, எஸ்.வி.மங்களம் ஊராட்சியில் தென்னை நாற்று பண்ணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதியில் TNMSGGCF - பசுமை போர்வை திட்டம் 2023-2024-ன் கீழ் விவசாயிகளிடம் பயிரடப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் உபயோகிக்கப்படும் உரம் குறித்தும், காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பதியப்பட்டுள்ள வழக்குகளின் நிலைகள், காவலர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் தொடர்பாகவும், மருதிப்பட்டி ஊராட்சி பகுதியில் KAVIDP 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.3.9 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர்பாசன வசதி குறித்தும், சிங்கம்புணரி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டடம், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் குளிர்பதன சேமிப்பு கிடங்கு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது சிங்கம்புணரி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சார்ந்த பொது மக்களை ஒருங்கிணைத்து, கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கு ஏதுவாக திட்டமிடப்பட்டு, அதன்படி பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, அரசின் ஒவ்வொரு துறைகளின் சார்பில், சம்பந்தப்பட்ட முதல் நிலை அலுவலர்கள் தங்களது துறை அலுவலர்களுடன், இன்றைய தினம் சிங்கம்புணரி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தங்களது துறை ரீதியான பணிகளை நேரடியாக கள ஆய்வில் உட்படுத்திக் கொண்டு, பொதுமக்களை நேரில் சந்தித்து, பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு மனுக்களையும் பெற்றுள்ளனர். மேலும், இப்திட்டத்தினை முன்னிட்டு, முன்னதாக 191 மனுக்களும், இன்றைய தினம் 445 மனுக்களும் என மொத்தம் 636 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் தகுதியுடைய 104 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, உரிய பயன்களும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு பெறப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக, தகுதியுடைய பயனாளிகளுக்கு உரிய பயன்கள் உடனடியாக வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது தவிர பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு, அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாகவும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story