சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பேருந்துகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு
சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட 31 பள்ளிக்கூடங்களின் 315 வாகனங்கள் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் திடலில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. வருவாய் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆய்வாளர்கள் சதாசிவம் செந்தில் ஆகியோர் வாகனங்களை ஆய்வு செய்தனர். வாகனங்களில் அவசர வழி, பிரேக், முதலுதவி சிகிச்சை பெட்டி, தகுதி சான்று மற்றும் வண்டியின் உட்புற கட்டமைப்பு, இருக்கையின் உறுதிதன்மை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வில் ஒரு சில வாகனங்களில் சிறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை பள்ளியின் நிர்வாகத்திடம் தெரிவித்து சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக பள்ளி வாகன டிரைவர்களுக்கு கண் பரிசோதனையும், தீ விபத்தில் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து செயல்முறை விளக்கத்தை தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் செய்து காட்டினர்.