அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி. தெரிவித்ததாவது: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, இருதவியல் சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், புற்றுநோய் கதீர்வீச்சு சிகிச்சைப் பிரிவு, 500 படுக்கைகள் கொண்ட கட்டிடம் மற்றும் கட்டிடத்தின் மேல் தளத்தையும் இன்று ஆய்வு செய்யப்பட்டது.
மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளதா எனவும், ஏதாவது குறைகள் எதுவும் இருக்கிறதா எனவும், குறைகள் இருக்கும் பட்சத்தில் எப்படி நிவர்த்தி செய்வது குறித்தும், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இன்று நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைகளை புதுப்பிக்கவும், தண்ணீர் செல்லக்கூடிய பைப் லைன் உள்ளிட்ட அடிப்படையான பணிகளை உடனடியாக சரி செய்யவும் சம்மந்தபட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் மருத்துவமனை வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் என்னென்ன மேற்கொள்ள வேண்டும் என்று அடுத்த வாரம் முறையாக ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்.
அதன் மூலம் தேவையான நிதி பெருவதற்கும், என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், இந்த மழைக்காலத்தில் மின் பெட்டிகள் மற்றும் மின் கம்பிகளில் ஈரக் கசிவு அடிக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.பின்னர் நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் நவீன சமையல் அறை கூடம் ஆய்வு செய்து அங்கு நோயாளிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள உணவுகளை அருந்தி ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனையின் மின் பிரிவு அறை, நவீன சலவையகத்தினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறை மின் பொறியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.