திருவாலங்காடு அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு
சாலை அமைக்கும் பணி
திருவாலங்காடு அடுத்துள்ள ராஜரத்தினபுரம் பழங்குடியினா் பகுதியில் ரூ. 30 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஒன்றியக் குழுத் தலைவி ஜீவா விஜயராகவன் ஆய்வு செய்தாா்.
திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜாகீா்மங்களம் ஊராட்சி, ராஜரத்தினபுரத்தில் பழங்குடியினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவா்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் அவதிப்பட்டு வந்தனா்.
அதைத்தொடா்ந்து அப்பகுதி மக்கள் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி ஜீவா விஜயராகவனை நேரில் சந்தித்து, சிமெண்ட் சாலை அமைத்துத் தருமாறு கோரிக்கை மனுவை வழங்கினா். இதையெடுத்து, திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு செய்து சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி ஜீவா விஜயராகவன் ராஜரத்தினபுரம் பழங்குடியினா் பகுதியில் நடைபெறும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை திடீா் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு பணி ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி ஆணையா் காளியம்மாள், திமுக கிளைச் செயலாளா் டில்லிபாபு ஆகியோா் உடனிருந்தனா்.