தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருச்சி ஆட்சியர்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தனியார்பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தொடங்கி வைத்து பள்ளி பேருந்துகளின் பதிவுச் சான்று, காப்பீட்டுச் சான்று, நடத்துனர் மற்றும் ஓட்டுநர் உரிமம், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

மாவட்டத்திலுள்ள 147 பள்ளிகளின் 663 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில் தகுதி இல்லாத பள்ளி வாகனங்களுக்கு குறைகளை சரி செய்த பின்னரே தகுதிச் சான்று வழங்கிட வேண்டும் என போக்குவரத்து அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திருச்சி மாவட்டத்தில் உள்ள 147 பள்ளிகளில் உள்ள 663 வாகனங்களில் 153 வாகனங்கள் தகுதிச்சான்று புதிப்பிக்கப்படாமல் இருக்கிறது. வாகனங்களில் அனைத்து நிபந்தனைகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் அவைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் நமது மாவட்டத்தில் பள்ளி பேருந்துகளால் மாணவ மாணவிகளுக்கு எவ்வித விபத்தும் ஏற்படாது என தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். மீறினால் ஆட்டோ டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாகன ஓட்டுனர்கள் சமுதாயத்தின் முதல் பொறுப்பாளராக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் அவர்களது பார்வை திறன் மற்றும் மருத்துவ சான்றிதழ் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறினார்.

Tags

Next Story