திருப்பூரில் இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்!
செல்போன் காதல்
திருப்பூரில் இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்! திருப்பூரில் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்து தாயாரின் 7 பவுன் நகையுடன் காதலனை சிறுமி சந்தித்துள்ளார். பின்னர் நகையை விற்று செல்போன்கள் வாங்கி ஜாலியாக சுற்றி திரிந்த நிலையில் பாலிடெக்னிக் மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் திருப்பூர் வடக்கு மகளிர் போலிசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலிசார் கூறியதாவது திருப்பூரை சேர்ந்த 17 வயது மாணவன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறான். இவனுக்கும் 16 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலமாக தகவல்களை பரிமாறி வந்தனர். நாளடைவில் இது காதலாக மலர்ந்தது. இதையடுத்து சிறுமி தன்னிடம் சிறிய அளவிலான செல்போன்தான் உள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய உயர்ந்த செல்போன் வாங்கி கொடுக்கும்படி தனது காதலனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த மாணவன் தற்போது தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. பணத்தை நீ கொண்டு வந்தால் அனைத்து வசதிகளுடன் கூடிய செல்போன் வாங்கி கொடுப்பதாக தெரிவித்துள்ளான். மேலும் உன்னை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளது என்றும் ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார். இதை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுமி தனது வீட்டு பீரோவில் தனது தாயாரின் 7 பவுன் நகை இருந்துள்ளது. விலை உயர்ந்த செல்போன் வாங்குவதற்காக அந்த நகையை யாருக்கும் தெரியாமல் அந்த சிறுமி எடுத்துக் கொண்டு தனது காதலனிடம் தெரிவித்துள்ளார்.
காதலன் கூறியபடி நகையுடன் சிறுமி மத்திய பஸ் நிலையம் வந்துள்ளார். அங்கு தயாராக இருந்த சிறுவன், சிறுமியிடம் இருந்த நகையை வாங்கி அங்குள்ள கடையில் விற்று விலை உயர்ந்த ஐ போன்களை இருவரும் வாங்கியுள்ளனர்.
மீதம் உள்ள பணத்தில் திருப்பூரை சுற்றி வலம் வந்துள்ளனர். அதன்பிறகு மாலையில் சிறுமியும், சிறுவனும் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர். சிறுமி கையில் விலை உயர்ந்த செல்போன் இருப்பதை கண்ட தாயாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. சிறுமியை பிடித்து கேட்க அதன்பிறகே நகையை எடுத்து சென்று விற்று விலை உயர்ந்த செல்போன்களை வாங்கியதும், தனது காதலனுக்கு ஒரு செல்போனை கொடுத்து விட்டு வந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரிக்கும்போது நகையை விற்று செல்போன்கள் வழங்கியதுடன் பணத்தை தண்ணீர் போல செலவு செய்து திருப்பூரை சுற்றி வலம் வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சிறுமியை ஆசை வார்த்தை கூறி நகையை பெற்று விற்றதுடன் ஜாலியாக சுற்றி திரிந்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவனை போலிசார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நகையை விற்று செல்போன்கள் வாங்கி சிறுவனும், சிறுமியும் சுற்றித் திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...