தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்ற அறிவுறுத்தல்
ஆலோசனை கூட்டம்
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள போலீஸ், வருமான வரித்துறை, கலால், சரக்கு மற்றும் சேவைகள் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிருந்தாதேவி தலைமை தாங்கினார். இதில், சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் ராஜீவ்சங்கர் கிட்டூர், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் சர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் பேசியதாவது:- சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கவும், மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் 33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்த பின் அவற்றை ஆய்வு செய்து விடுவிக்கும் குழு மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினரும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தீவிரமாக வாகனங்களை சோதனையிட வேண்டும். மேலும், முக்கிய தேர்தல் பிரச்சார கூட்டங்கள், வேட்பாளர்களின் பிரசாரங்கள் ஆகியவற்றையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். வாகன சோதனையில் ஆவணங்களின்றி ஏதேனும் ரொக்கமோ?, பொருட்களோ பறிமுதல் செய்தால் அதற்கான விவரங்களை உடனுக்குடன் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி செலவின பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு தெரிவித்திட வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு தேர்தல் செலவின பார்வையாளர்கள் பேசினர்.
Next Story