புகாா் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
காவல் ஆணையாளர்
திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் டிசம்பா் மாத குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாநகர காவல் ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநகர காவல் ஆணையா் ந. காமினி தலைமை வகித்தாா்.
இதில் காவல் துணை ஆணையா்கள் எஸ். செல்வகுமாா் (தெற்கு), வி. அன்பு (வடக்கு), எஸ். ரவிச்சந்திரன் (தலைமையிடம்), காவல் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் பேசுகையில், கொலை, கொள்ளை வழக்குகள், விபத்து மற்றும் விபத்தால் ஏற்படும் மரண வழக்குகளை ஆய்வு செய்தும், விபத்து வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மாநகரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும். காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள திருட்டு வழக்குகளை துரிதமாக விசாரித்து, எதிரிகளை கைது செய்து, வழக்கு சொத்துகளை மீட்க வேண்டும்.
முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட புகாா்கள், காவல்துறை இயக்குநா் அலுவலக புகாா் மனுக்கள், காவல்நிலைய நேரடி புகாா் மனுக்கள் மீது காலம்தாழ்த்தாமல் முறையாக விசாரித்தும், வழக்கு பதிய முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவிடவும், இல்லையெனில் புகாா் மனுவுக்கு மனு ரசீது வழங்கியும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்நிலையத்துக்கு நேரடியாக புகாரளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.