அவரையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழா
உலக காய்கறிகள் நிறுவனம், தைவான் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் இணைந்து செயல்படுத்தும் தக்காளி மற்றும் அவரையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அவரையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு வயல் விழா தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் பறையப்பட்டி புதூர் மற்றும் சிக்களுர் கிராமத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய விரிவாக்கக கல்வி இயக்ககத்தின் பயிற்சி துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ந. ஆனந்தராஜா இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் இந்த தொழில்நுட்பங்களை பின்பற்றுவதின் மூலம் விவசாயிகள் அவரை மற்றும் தக்காளியில் பூச்சி மருந்துகளின் எண்ணிக்கையை குறைக்க இயலும் என்றும் கூறினார்.
அவரை மற்றும் தக்காளியில் தோன்றும் நோய்களைப் பற்றியும் அவற்றை கட்டுப்படுத்த உபயோகப்படுத்தப்படும் உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை பற்றியும் பயிர் நோயியல் துறை பேராசிரியர் முனைவர் கா. கார்த்திகேயன் விவசாயிகளுக்கு விளக்கினார்.
விவசாயிகள் நடவின்போது உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான டிரைகோடர்மா மற்றும் பேசில்லஸ் சாப்டிலிஸ் ஆகியவற்றை மண்ணில் இடும்போது வேர் சார்ந்த நோய்களை விவசாயிகள் தவிர்க்க இயலும் என்பதையும் மற்றும் பயிர்களில் நோயின் ஆரம்ப கட்டத்தில் இந்த உயிர் கட்டுப்பாட்டு காரணிகளை உபயோகப்படுத்தும் போது பாதிப்பை வெகுவாக குறைக்கலாம் என்பதனையும் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
அவரை மற்றும் தக்காளியில் தோன்றும் பூச்சிகளைப் பற்றியும் அவற்றை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பற்றியும் பூச்சியியல் துறை பேராசிரியர்கள் முனைவர் பா. ச. சண்முகம் முனைவர். தி. இளையபாரதி ஆகியோர் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்கள். மேலும் பூச்சிகளின் எண்ணிக்கையை பொருத்து கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் பூச்சி மருந்து உபயோகத்தை மட்டுமே பூச்சி கட்டுப்பாட்டிற்கு சார்ந்திருக்கக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
உயிர் நுட்பவியல் பேராசிரியரான முனைவர். ந. மணிகண்ட பூபதி அவர்கள் பயிர்களில் உண்டாகும் நச்சுயிரி நோய்களைப் பற்றியும் மற்றும் அவற்றை கட்டுப்படுத்த உருவாகியுள்ள புதிய தொழில்நுட்பங்களை பற்றியும் அவற்றின் நன்மைகளைப் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். பயிர்களில் தோன்றும் நூற்புழுக்களின் பாதிப்பை பற்றியும் அவற்றின் மேலாண்மை முறைகளை பற்றியும் நூற்புழுவியல் பேராசிரியர் முனைவர். ந. சீனிவாசன் அவர்கள் விளக்கினார்.
வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர் முனைவர். க. இந்துமதி குத்து அவரை சாகுபடி தொழில் நுட்பங்களை பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகளை பற்றி வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் பேராசிரியர் முனைவர் சி. சிவகுமார் மற்றும் தோட்டக்கலை துறை செயல்பாடுகளை பற்றி தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேஷ் கண்ணா விரிவாக எடுத்துரைத்தனர்.
விரிவாக்க கல்வி இயக்ககத்தின் உதவி பேராசிரியர் முனைவர். ஜெய் ஸ்ரீதர் விவசாய்கள் சந்தை சார்ந்த விவசாயத்தை பின்பற்ற வேண்டும் என்று கூறினார். முன்னதாக செயல்விளக்க வயலில் பின்பற்றிய தொழில்நுட்பங்களான மஞ்சள் வண்ண அட்டைப்பொறி, நீல வண்ண அட்டை பொறி, இன கவர்ச்சி பொறிகளை பயன்படுத்துதல், வேப்பம் புண்ணாக்கு இடுதல் போன்றவற்றை பற்றி பூச்சியியல் துறை இணை பேராசிரியர்கள் முனைவர் தி.இளையபாரதி மற்றும் முனைவர் பா. ச. சண்முகம் விவசாயிகளுக்கு வயலில் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் இந்த செயல் விளக்கத்தை செய்த விவசாயியை வெங்கடேசன் காமராஜ் தங்கள் பின்பற்றிய தொழில்நுட்பங்களை பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை ஆராய்ச்சியாளர்களான அருளகுமார், பாக்கியராஜ், மஞ்சரி, சோமசுந்தரம், மற்றும் நவீன் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் குளத்துபாளையம் மற்றும் சிக்களுர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கு பெற்று பயனடைந்தனர்.