சேலத்தில் அறிவுசார் மையம்: காணொலி மூலம் முதல்வர் திறப்பு
விழாவில் பங்கேற்ற அதிகாரிகள்
தமிழகத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும், வாசிப்பை நேசிக்க செய்யவும் அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சேலம் அய்யந்திருமாளிகையில் ரூ.2½ கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தில் வாசிப்பு அறை, ஸ்மார்ட் வகுப்பறை, கணினி மையம், நூலகர் அறை, கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை, மேலாளர் அலுவலகம் மற்றும் இருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமிராக்கள், எல்.சி.டி. தொலைக்காட்சி, புரொஜெக்டர் ஆகிய வசதிகளும் உள்ளன. இந்த அறிவுசார் மையத்தை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சேலம் அய்யந்திருமாளிகை அறிவுசார் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வக்கீல் ராஜேந்திரன் எம்.எம்.ஏ., ஆணையாளர் பாலச்சந்தர், துணை மேயர் சாரதாதேவி, அஸ்தம்பட்டி மண்டலக்குழு தலைவர் உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அவர்கள் அறிவுசார் மையத்தை பார்வையிட்டு குத்துவிளக்கு ஏற்றினர். மேலும் அங்கு மாணவ, மாணவிகள் உள்பட பலர் அமர்ந்து படித்தனர்.