கழிவுநீர் கால்வாய்களில் தூர்வாரும் பணி தீவிரம்
காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் தூர்வாரம்பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதிகளிலுள்ள கால்வாய்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை நீரினால் சுற்றுப்புறத்தில் இருந்து குப்பைகள் அடித்து வரப்பட்டு கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை காரணமாக சாலையோரங்களில் கிடந்த குப்பைகளை மழைநீரில் வடிகாலுக்குள் இழுத்து சென்று அடைப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து நேற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்றது. காங்கயம் ரவுண்டானா முதல் தாராபுரம் சாலை களிமேடு வரை உள்ள கழிவுநீர் கால்வாயில் பாட்டில்கள், கவர்கள் மற்றும் குப்பைகள் ஆகியவை தேங்கி நின்றது. எனவே உடனடியாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் இந்த கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை அகற்றினர். கால்வாய் அடைப்பினால் சுற்று சூழல் பாதிப்பு, சுகாதார சீர்கேடு மற்றும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை அடுத்து காங்கயம் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக தூர்வாரும் பணியை செய்து வருகிறது.
மேலும் காங்கயம் நகராட்சி சார்பில் நகரப்புறப் பகுதியில் உள்ள கால்வாய், கழிவுநீர் நீர்த்தேக்கம், குப்பைகளால் ஏற்பட்ட அடைப்பு இவைகள் யாவும் அகற்றப்பட உள்ளது. மேலும் நகர் மன்ற தலைவர் சூரியப்பிரகாஷ் மற்றும் காங்கயம் நகராட்சி ஆணையர் கனிராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் சரவணன் மேற்பார்வையில் இந்த தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் இது போன்ற கழிவுப் பொருட்களை சாலை ஓரங்களிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் கொட்ட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.