உத்திரமேரூரில் பொங்கல் மண்பானை தயாரிப்பு தீவிரம்

உத்திரமேரூரில் பொங்கல் மண்பானை தயாரிப்பு தீவிரம்
பொங்கல் பானை தயாரிப்பு தீவிரம்
உத்திரமேரூரில் பொங்கல் மண்பானை தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையின் போது, வீட்டு வாசலில் புது மண்பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபடுவதை மக்கள் வழக்கத்தில் கொண்டு உள்ளனர்.

இதற்காக, ஆண்டுதோறும் பொங்கல் சீசனில், மண்பானை தயாரிப்பு பணியில், மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரம் காட்டுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடபாளையம், களியாம்பூண்டி, சின்ன ஆண்டித்தாங்கல், அரசாணிமங்கலம், மதுார் உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, வேடபாளையம் மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: நாகரிக வளர்ச்சி காரணமாக அலுமினியம், எவர்சில்வர் உள்ளிட்ட பாத்திரங்களை சமையல் செய்ய பயன்படுத்தினாலும், பொங்கல் பண்டிகைக்கு பாரம்பரிய முறைப்படி மண்பானை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இத்தகைய பாரம்பரியம்எங்களது தொழிலை பெருமிதப்படுத்துவதாக உள்ளது. பழைய நடைமுறையிலான மரத்தால் ஆன சக்கரத்தை பயன்படுத்தி மண்பானைகள் தயாரிக்கிறோம்.

இங்கு உற்பத்தி செய்யும் பானைகளை உத்தரமேரூர் மற்றும் சுற்றி உள்ள கிராம பகுதிகளில் விற்பனை செய்வோம். மண்பானை தயாரிக்கும் மூலப் பொருள்களுக்கான விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

எனினும், கடந்த ஆண்டு கிராமங்களில் விற்றதை போல, பானைகளின் அளவிற்கு ஏற்ப 80 - 200 ரூபாய் வரை மண்பானைகள் விற்பனை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்."

Tags

Next Story