ஏற்காடு மலை கிராமங்களில் விடிய, விடிய தீவிர சாராய வேட்டை

ஏற்காடு மலை கிராமங்களில் விடிய, விடிய தீவிர சாராய வேட்டை

போலீசார் சோதனை 

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக ஏற்காடு மலை கிராமங்களில் போலீசார் விடிய, விடிய தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்து பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, சேலம் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படும் இடங்களில் கடந்த 3 நாட்களாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் விடிய, விடிய மலைக்கிராமங்களில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். ஏற்காடு வனப்பகுதிகளில் உள்ள 70 கிராமங்களிலும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு கிராமமாக போலீசார் சென்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளிலும், பழைய சாராய வியாபாரிகளின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும், ஆற்று ஓடைகள் மற்றும் வனப்பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்றும் போலீசார் கண்காணித்தனர். இந்த சாராய வேட்டை நேற்று முன்தினம் விடிய, விடிய நடந்தது. ஆனால் ஏற்காடு மலைப்பகுதியில் நடந்த சாராய வேட்டையில் விஷசாராயம் விற்பனை எதுவும் நடைபெறவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும், ஏற்காடு மலைக்கிராமங்களில் சாராய விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கிராம மக்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்.

Tags

Next Story