சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருவதை அடுத்து ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

நாமக்கல்லில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இருவர் ஆபத்தான நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் ச. உமா அந்த உணவகத்தை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் கருணாநிதி என்ற பெயரில் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை ஜீவானந்தம் என்பவர் நடத்தி வருகிறார். இதில் நேற்று (30.4.2024) இரவு சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நாமக்கல் அடுத்த எருமப்பட்டி தேவராயபுரம் சேர்ந்த நதியா மற்றும் சண்முகநாதன் ஆகியோர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக அந்த தனியார் உணவகத்தில் இருந்து தேவராயபுரம் பகுதியைச் சேர்ந்த பகவதி என்ற மாணவர் 7 உணவு பார்சல்களை வாங்கி தங்கள் வீட்டிற்கு கொண்டு சென்று குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார். அதனை சாப்பிட்ட மேற்கண்ட 2 பேர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் உணவு பாதுகாப்பு வட்டார அலுவலர் முருகன் ஆகியோர் சம்மந்தப்பட்ட உணவகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இதனையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.மாணவர் பகவதி கொடுத்த புகாரைத் தொடர்ந்து, ஹோட்டல் உணவக உரிமையாளர் ஜீவானந்தம் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள அனைத்து ஓட்டல்களுக்கும் சென்று சோதனையிட்டனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் கூறும் போது, அந்த ஹோட்டலில் இருந்து மாதிரி உணவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து நோட்டீஸ் அளிக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முழு விவரங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். நாமக்கலில் தனியார் உணவகத்தில் பார்சல் வாங்கி சென்ற உணவு சாப்பிட்ட இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும் மேலும் அந்த ஹோட்டலில் சாப்பிட்ட சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Tags

Next Story