இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திய இந்த இயக்கத்தினர் பின்னர் மாவட்டத் தலைநகரங்களில் 26, 27 தேதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிப்ரவரி 28 ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் பிப்ரவரி 29, மார்ச் 1 தேதிகளில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சென்னையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்தை மார்ச் 2, 3 ஆம் தேதிகளில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்திய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், தங்களது கோரிக்கையை ஏற்று தீர்வு காணக் கோரியும் போராட்டத்தின் 15ஆவது நாளான திங்கள்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ராஜகுமாரி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பாலரமணி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ஜோஸ், துணைச் செயலர் ராஜேந்திரன், மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளர் ஷகிலா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். எங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலர் ஜோஸ் தெரிவித்தார்.

Tags

Next Story