தமிழ் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கியமும் நவீன கோட்பாடுகளும் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்ப் பல்கலைக்கழக, இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளியும் பள்ளியும், தமிழ் ஒப்பிலக்கியக் கழகமும் இணைந்து நடத்திய “ஒப்பிலக்கியமும் நவீன கோட்பாடுகளும்” என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

விழாவின் ஒரு பகுதியாக, மூத்த தமிழறிஞர் பேரா ந.சுப்புரெட்டியார் பெயரில் மொழிப்புலத்தில் நிறுவப்பட்டுள்ள, பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் -100 கல்வி அறக்கட்டளையின் மூலம் ஆண்டு தோறும் தமிழ் மொழிக்குச் சிறந்த பங்களிப்பு செய்த ஆய்வறிஞர்களுக்குத் திறனாய்வுச் செம்மல் விருதும் ரூ.25,000/- காசோலையும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2023- ஆம் ஆண்டிற்கான திறனாய்வுச் செம்மல் விருது மூத்த தமிழ் அறிஞரும் சிறந்த திறனாய்வாளருமான பேரா.தெ.ஞானசுந்தரத்துக்கு துணைவேந்தர் வி.திருவள்ளுவன் விருதினையும் காசோலையையும் வழங்கிச் சிறப்பித்தார். பின்னர் துணைவேந்தர் பேசுகையில், தமிழ்ப் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டுகளில் க.பஞ்சாங்கம், தி.சு.நடராசன் ஆகியோருக்கு வழங்கியதைப் போல, இந்தாண்டும் இதனைப் பேரா.தே.ஞானசுந்தரத்துக்கு வழங்குவதில் பெருமை கொள்கின்றது.

இன்று வளர்ந்து வரும் துறையாகிய ஒப்பிலக்கியக்கியத் துறை என்பது ஒரு பரந்துபட்ட ஆய்வுக்களம், சமூகவியல், அறிவியல், கலைகள், அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் இலக்கியத்துடன் ஒப்பிட்டு ஆய்வுசெய்யக்கூடிய இத்துறை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழி உலகத்தை ஒருங்கிணைக்கக்கூடிய துறையாக உள்ளது எனக் குறிப்பிட்டார். திறனாய்வுச் செம்மல் விருது பெற்ற தெ.ஞானசுந்தரம், விருது பெற்றதற்கான ஏற்புரையில், "எனது தமிழ்ப் பணியைப் பாராட்டியும், ஆய்வுப் பயணத்தை ஊக்கப்படுத்தியும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ள, விருதுக்குப் பரிந்துரைத்த தேர்வுக்குழுவிற்கும் விருது வழங்கிய பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு நன்றி" என்றார்.

பேராசிரியர் க.பஞ்சாங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் பல்வேறு ஆய்வு அறிஞர்கள் தமது ஆய்வுரைகளை வழங்கினர். முனைவர் அ.பிரசில்லா வில்லி பாரமும் பாரத மாலையும் – தமிழ் – மலையாள ஒப்பீடு என்னும் தலைப்பிலும், முனைவர் கே.பழனிவேலு எடுத்துரைப்பியல் நோக்கில் தமிழ்ச் சிறுகதைகள் என்னும் தலைப்பிலும், சு.சந்திரகுமார் அவர்கள் பின்நவீனத்துவ அணுகுமுறையும் மகேந்திரவர்மனின் மத்தவிலாசப் பிரகசனம் என்ற தலைப்பிலும், முதுமுனைவர் சு.ராமர் திணையியலும் புவி அரசியலும் என்கிற தலைப்பிலும், முனைவர் ச.சரவணன் பேராசிரியர் அகத்தியலிங்கமும் தமிழ் மொழியியலும் என்னும் தலைப்பிலும், முனைவர் பெ.சுமதி சங்க இலக்கியம் – காதா சப்த சதியில் தலைவி பாத்திரக் கட்டமைப்பு என்னும் தலைப்பிலும் தமது ஆய்வுரைகளை வழங்கினர்.

இணையவழியாகக் கனடாவிலிருந்து பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி, தமிழ் ஒப்பிலக்கியத்துறையில விபுலாநந்தரின் பங்களிப்பு என்னும் தலைப்பிலும், அங்கோர் தமிழ்ச்சங்கம், கம்போடியாவிலிருந்து தாமரை சீனிவாச ராவ், ரியம்கர் – கம்போடியக் கெமர் மொழியின் இராமயணக் கதை வடிவங்கள் என்னும் தலைப்பிலும் ஆய்வுரைகளை வழங்கினர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும், மொழிப்புல முதன்மையரும், இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத்துறைத் தலைவருமாகிய பேராசிரியர் ச.கவிதா வரவேற்றார். நிறைவாக முனைவர் சி.சாவித்ரி நன்றி கூறினார்.

Tags

Next Story