வேலூரில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா
உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்த ஆட்சியர்
வேலூரில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டினை கொண்டாடவும், மக்களிடையே சிறுதானியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அந்தந்த மாவட்டங்களில் சிறுதானிய உணவு திருவிழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் , வேலூர் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான சிறு தானிய உணவு திருவிழா இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
சிறுதானிய உணவு திருவிழாவை முன்னிட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், உழவர் அங்காடி, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான வசதிகள், மக்கள் சந்தை, இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களின் அங்காடி, பாரம்பரிய சிறுதானிய அரிசி வகைகள் போன்ற பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து சிறுதானிய உணவுகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.