உலக மகளிர் தினம் அரசு பள்ளி மாணவிகள் உலக சாதனை
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பாரம்பரிய கலைகளின் சங்கமம் பயிற்சி பள்ளி சார்பில் தற்காப்பு கலை பயிற்சியாளர் சேலம் கராத்தே நடராஜ் தலைமையில் உலக சாதனை நிகழ்ச்சி இளம்பிள்ளை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளம்பிள்ளை உள்ளிட்ட பல்வேறு பகுதி அரசுப்பள்ளிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு சாகசங்களும், சாதனைகளும் செய்து அசத்தினர்.
இதில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே நேரத்தில் தரையில் மண்ணை கூட்டி வைத்து துணியால் கண்களை கட்டிக்கொண்டு மண்டியிட்டபடி 30 நிமிடத்தில் 2500 கரேத்தே பஞ்சு செய்து வேல்டு சூப்பர் டேலண்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் என்ற அமைப்பில் உலக சாதனை படைத்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முழு தேங்காயை பற்களால் கடித்து உரித்தும், சைக்கிள் ஒன்றை பற்களால் கடித்து தூக்கினர்.
இதிலும் குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவிகள் இருவர் காலி சிலிண்டர்கள் இரண்டை தங்களது இரட்டை சடைகளில் கட்டி தூக்கியும் சாகசங்களை செய்து அசத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு பல்வேறு தற்காப்புகளை சாகசங்களும், உலக சாதனைகளையும் படைத்த மாணவிகளை வெகுவாக பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.