சர்வதேச யோகா தினம்!

சர்வதேச யோகா தினம்!

யோகா தினம்

நீலகிரி மாவட்டத்தில் யோகா தினத்தையொட்டி பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் மனம் ஒருங்கிணைந்து, செயல்பட உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, வயது மூப்பைத் தடுக்க என பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார்.

காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் கல்லூரி மாணவர்கள் யோகா செய்வது குறித்து பயிற்சி அளித்தனர். இதற்கு தேவையான ஏற்பாடுகளை கணினி அறிவியல் பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார் செய்திருந்தார்.

ஊட்டி அடுத்த நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நீலகிரி மாவட்டம் 31 தமிழ்நாடு தனி அணி என்.சி.சி. சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நஞ்சநாடு, ஏகலைவா அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகா செய்து அசத்தினர்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துமாரியப்பன், என்.சி.சி அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "யோகா உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் நன்மை அளிக்கும். அனைத்து வயதுப் பிரிவினரும் யோகா கற்றுக் கொள்ளலாம்," என்றனர். இதேபோல் ஊட்டி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இதற்கு மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமை தாங்கி யோகா செய்தார். மகிளா நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, குடும்ப நீதிமன்ற நீதிபதி லிங்கம், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர், உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகன கிருஷ்ணன், மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தமிழ் இனியன், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி பாரதி பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து வாழ்க வளமுடன் இயக்க மனவள பயிற்சியாளர் சுபத்ரா யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். இதேபோல் 10-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில், வெலிங்டன் ஸ்டேஷனில் எம்.ஆர்.சி. நிர்வாகத்தால் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

ஸ்ரீநாகேஷ் பாராக்ஸில் நடத்தப்பட்ட இந்த அமர்வில் 624 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் அரசு நிறுவனங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

Tags

Next Story