பாலியல் குற்றவாளிகள் படத்தை வெளியிட்ட காவலரிடம் விசாரணை
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுக்காவிற்கு உட்பட்ட வெள்ளகோவில் கடந்த 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற தேர் திருவிழாவில் அரங்கேறிய 17 வயது சிறுமியின் கூட்டு பாலியல் பலாத்காரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சுமார் 7 பேரை வெள்ளகோவில் போலிசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் போலிசார் அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட 7 பேரின் புகைப்படங்களையும் முகத்தையும் மறைத்து ரகசியம் காத்து வந்த நிலையில் குற்றவாளிகள் 7 பேரை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த அடுத்த நாளே புகைப்படங்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.
சாதாரண வழக்கில் கைதாகும் குற்றவாளியின் புகைப்படத்தை மறைக்கும் போலிசார் இந்த போக்சோ வழக்கில் 7 இளைஞர்களின் புகைப்படங்களை வெளியிட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட 7 இளைஞர்களின் அடையாள அணிவகுப்பு நடைபெறும் முன்பே கைது செய்யபட்டவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது வழக்கின் போக்கை பாதித்துள்ளது எனவும், புகைப்படத்தை வைத்து பலவித எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது எனவும், குற்றவாளிகளை சார்ந்த குடும்பங்களும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும், காசுக்காக இந்த புகைப்படங்கள் வெளியாகியதா எனவும், போக்சோ வழக்கில் இருந்து திசை மாறி ஒரு சில அரசியல் கட்சிகளின் மீதும் கவனத்தை ஈர்த்துள்ளது எனவும், இது போன்று ரகசியம் காக்கப்பட வேண்டிய வழக்கில் புகைப்படத்தை வெளியிட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் யார்? காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான குழு ஆய்வு செய்ததில், புகைப்படத்தை வெளியிட்டது காவலர் எனவும், அவரது பெயர் ராமராஜன் என்பதையும் கண்டறிந்துள்ளது.
இதனை அடுத்து காவல் கண்காணிப்பில் எடுக்கப்பட்ட ராமராஜன் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் இவர் ஆயுதப்படைக்கோ அல்லது சஸ்பெண்டோ செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வருகிறது.