வெளிப்படை தன்மையான நூல் கொள்முதல் இணையதள சேவை அறிமுகம்
பொது நூலகங்களுக்கு வெளிப்படை தன்மையான நூல் கொள்முதல் இணையதள சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் "வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் இணையதள சேவையை" அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். வெளிப்படை தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024 அடிப்படையாகக் கொண்டு இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் நூல் கொள்முதல் செய்வதற்கு தங்களை பதிவு செய்து நூல்களை பதிவு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். நூல் தேர்வு குழுவில், துறை சார் வல்லுநர்கள், நூலகர்கள் மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெறுவர். ஒவ்வொரு நூலகமும் ஒவ்வொரு ஆண்டில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மதிப்பிலான நூல்களை இணையதளம் வழி தேர்வு செய்து பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும் ஆண்டு முழுவதும் விண்ணப்பம் செய்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு இணையதளத்தில் இருக்கும் எனவும், ஒவ்வொரு காலாண்டுக்கு வாரியாக நூல் கொள்முதல் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கீழ்க்கண்ட இணையதள முகவரியில் https://bookprocurement.tamilnadupubliclibraries.org பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சிறுவர் நூல்களும் தமிழ் நூல்களும் வாசகர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Next Story