பயணிகளை கவரும் விதமாக டிஸ்கோ போட் அறிமுகம்
'டிஸ்கோ' போட்
செய்யூர் அருகே பயணிகளை கவரும் விதமாக டிஸ்கோ போட் அறிமுகம் .
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் 'ரெயின் ட்ராப் போட் ஹவுஸ்' உள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தந்து, தங்களின் விருப்பத்திற்கேற்ப படகுகளில் சவாரி செய்து, கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ஓய்வு எடுக்கும் கூடாரங்களில் அமர்ந்து பொழுது போக்குவது வழக்கம். அங்கு, 8 இருக்கைகள் கொண்ட விசைப்படகு, 6 இருக்கைகள் கொண்ட விசைப்படகு, மூன்று இருக்கைகள் கொண்ட அதிவேக விசைப்படகு, இரண்டு இருக்கைகள் கொண்ட துடுப்பு படகு என, பல வகையான படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. குடும்பத்தினருடன் வருவோர், 8 இருக்கைகள் கொண்ட விசைப்படகு, 6 இருக்கைகள் கொண்ட விசைப்படகிலும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிவேக விசைப்படகுகளில் சவாரி செய்ய விருப்பம் காட்டுகின்றனர். தேர்வுகள் முடிந்து, பள்ளி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை துவங்கப்பட உள்ளதால், சுற்றுலா பயணியரை கவரும் விதமாக, புதிய 'டிஸ்கோ' போட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதிவேகம் கொண்ட விசைப்படகில் இணைக்கப்படும் இந்த டிஸ்கோ போட், நீர்ப்பரப்பில் விசைப்படகு வேகமாகச் செல்லும் போது, அதனால் ஏற்படும் அலையில் அசைந்து, எகிறியும் செல்லும். அது, சாகச உணர்வைத் தரும். நான்கு பேர் அமரும் இருக்கைகள் கொண்ட 'டிஸ்கோ' போட்டில் சவாரி செய்ய, 10 நிமிடத் திற்கு, 2,400 ரூபாய்கட்டணம் நிர்ணயம்செய்யப்பட்டு உள்ளது.
Next Story