ரேஷன் கடைகளில் கருவிழி ஸ்கேன் கருவி
குமரி மாவட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கருவிழியை ஸ்கேன் செய்யும் வசதிகொண்ட நவீன கருவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலட்சுமி புதிய கருவிகளை ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு வழங்கினார். இனி இந்த கருவிகள் உதவியுடன் ரேஷன் கடை பணியாளர்கள் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.
இது தொடர்பாக வழங்கல் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கருவிழியை ஸ்கேன் செய்யும் கருவி வழங்கப்பட உள்ளது. தற்போது 136 கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில கடைகளுக்கு இந்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து கடைகளுக்கும் இந்த கருவி வழங்கப்படும்' என்றார். குமரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களையும் சேர்த்து மொத்தம் 765 ரேஷன் கடைகள் உள்ளன.இவற்றில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 640 ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். மொத்தம் 19 லட்சத்து 30 ஆயிரத்து 520 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.