அடுக்குமாடி வீடு ஒதுக்குவதில் முறைகேடு; பொதுமக்கள் முற்றுகை
பாப்பிரெட்டிப்பட்டி . டிச 15: பாப்பிரெட்டிப்பட்டி அருகே தமிழக அரசால் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் தகுதி இருந்தும் தங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
தர்மபுரி மாவட்டத்தில் தமிழக அரசின் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வழங்கும் திட்டம் தற்போது கட்டுமான பணி நிறைவடைந்து ஒதுக்கீடு பணி நடைபெற்று வருகின்றது. தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரத்தில் 272 வீடு, கொண்டகரஹள்ளி 250 வீடு, நல்லம்பள்ளி அதியமான் கோட்டையில் 608 வீடு, பாப்பிரெட்டிப்பட்டி மோளையானூரில்192 வீடு, அரூர் நம்பிப்பட்டியில் 420 வீடு, அரூர் அம்பேத்கார் நகரில் 912 வீடு, பீச்சான்கொட்டாய் திட்டப்பகுதியில் 504 வீடு என மொத்தம் 3188 அடுக்கு மாடி வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குறைந்த பணம் அரசு பெற்று கொண்டு வீடு ஒதுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
அதன்படி தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் ஊராட்சியில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக 192 வீடுகள் அரசால் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்குவது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வீடு ஒதுக்குவதில் அரசு வேலையில் இருப்பவர்களுக்கு, வசதியாக இருப்பவர்களுக்கு, சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் போன்றவர்களுக்கு பெரும்பான்மையாக வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தகுதியுள்ள உண்மையான ஏழைகளுக்கு ஒதுக்கவில்லை எனக் கூறி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தெரிவிக்கையில் அரசு தரப்பில் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டதாக கடிதம் அனுப்பி இருந்தது.அதில் தாங்கள் ரூபாய் 1. 62,000 காசோலையை டி,டி,யாக எடுத்து குறிப்பிட்ட தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஒப்படைக்க வேண்டும் என கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடிதம் வந்ததாகவும், அதன் பேரில் தாங்கள் வட்டிக்கு பணம் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும், பணம் ஒரு லட்சத்து 62 ஆயிரம் டி.டி எடுத்து வந்து இன்னும் அரசு குறிப்பிட்ட 15-ம் தேதி வரை காலக்கெடு இருந்தும், அதிகாரியிடம் கொடுத்த போது அனைத்து வீடுகளும் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது வீடுகள் எதுவும் இல்லை என கூறுகிறார்கள்.
பொது மக்கள் முற்றுகையை அறிந்து பாப்பிரெட்டிப்பட்டி துணை வட்டாட்சியர் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கட்டுமானம் மேற்கொண்ட வாரியம் போன்றவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் அனைத்து பயனாளிகளின் பட்டியலும் அரசின் வழிகாட்டும் நெறிமுறைப்படி சரியாக உள்ளதா இதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே இன்னும் சில தினங்களில் வீடுகள் ஒதுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.