கடையநல்லூரில் இலவச மின்சாரம் வழங்குவதில் முறைகேடு?அதிகாரிகள் சஸ்பெண்ட்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்ம் பகுதி விவசாயிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றிருந்த இலவச மின் இணைப்புகளில் 30க்கும் மேற்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடையநல்லூா் மின் விநியோக உதவி செயற்பொறியாளா் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தவறான ஆவணங்கள்: அதில், விவசாயிகள் இலவச மின்சாரம் பெற தவறான ஆவணங்களை இணைத்துள்ளதாகவும், இளநிலை பொறியாளரும், வணிக உதவியாளரும் ஆதாயத்துக்காக விதிமீறி இணைப்பு அளித்தது தெரியவந்துள்ளதாகவும், மூன்று தினங்களுக்குள் மின் இணைப்பிற்குரிய சரியான ஆவணங்களை கடையநல்லூா் இளநிலை மின் பொறியாளா் அலுவலகத்தில் நேரில் ஒப்படைத்து,
பெயா் மாற்ற மின் இணைப்பு விவரத்தை காண்பிக்காவி டில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. விவசாயிகள் புகாா்: இதையடுத்து, விவசாயி காசிதா்மம் குமாா் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடையநல்லூா் உதவி செயற்பொறியாளா் அலுவலகத்திற்கு திரண்டு சென்று புகாா் தெரிவித்தனா்.
அவா்களிடம் முறையான ஆவணங்களை சமா்ப்பித்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் கடையநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.
அதிகாரிகள் விளக்கம்: இது தொடா்பாக கடையநல்லூா் மின்கோட்ட செயற்பொறியாளா் அலுவலக அதிகாரிகள் கூறியது: விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டு மின்வாரிய இளநிலைப் பொறியாளா் முகமதுரபீக், வணிக உதவியாளா் முருகேசன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அவா்களிடம் துறை ரீதியான விசாரணை நடக்கிறது.
அதிகாரிகளிடம் நேரடியாக தொடா்பு கொண்டு விண்ணப்பங்கள், ஆவணங்களின்றி மின் இணைப்பு பெற்றுள்ளனா். எனவே, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும். தரகா்கள் யாரையும் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றனா்.