பாசன வாய்க்கால் மீட்பு
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருவைகாவூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேளமாஞ்சேரி கிராமத்தில் பட்டத்துகன்னி வாய்க்கால் சுமார் 12 அடி அகலம் மற்றும் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கிராமத்திற்கு பாசன வசதி வழங்கி வந்தது. இந்த பட்டத்துகன்னி வாய்க்கால் மூலம் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் 35 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் பட்டத்து கன்னி வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து பாசன வசதியை தடுத்திருந்தனர்.
இதனால் பாசன வாய்க்கால் இருந்த சுவடி தெரியாமல் மறைந்து விட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து 35 ஏக்கர் விவசாய நிலத்தை பாசன வசதி பெறும் வகையில் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுப்பணித்துறை நீர்வளத் துறையின் காவிரி வடிநில கூட்டம், ஆற்றுப் பாசன உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அவர்களிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கோரிக்கை மனு அளித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உதவி செயற்பொறியாளர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த வாய்க்காலை வருவாய்த்துறை மூலம் அளந்து எல்லைகளை கண்டறிந்து, பாசன வாய்க்காலை வெட்டி நீர் வழியை மேம்படுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமையிலான குழுவினர் இன்று பட்டத்து கன்னி வாய்க்கால் சீரமைப்பை பார்வையிட்டு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.