பெரம்பலூரில் மனு கொடுத்த 10 நிமிடத்திற்குள் அடையாள அட்டை வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர்
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர், எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம் -சத்யா தம்பதியினர். இவர்களுக்கு பிருந்தா என்ற 13 வயது மகள் உள்ளார். இவர் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் பிறந்தது முதல் பிருந்தாவிற்கு ஒருவித தோல் நோய் இருந்து வந்ததால் அவருக்கு கைரேகை இல்லாமல் இருந்துள்ளது. மேலும் கைரேகையும் பதிவு செய்ய முடியவில்லை. இதனால், ஆதார் அட்டை கிடைக்காமல் தவித்த அவருக்கு எந்த விதமான அரசு ஆவணங்களும், அடையாள அட்டைகளும் கிடைக்கவில்லை. இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பிருந்தா மார்ச் 11 ம் தேதி அவரது பெற்றோருடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நேரில் சந்தித்து மனு கொடுத்தார். மனுவை பரிசீலனை செய்த ஆட்சியர் கற்பகம் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையையும் அதற்கான சான்றையும் வழங்கினர்.
அதனை தொடந்து, ரேகை இன்றி மாற்று வழி மூலமாக ஆதார் அட்டை பெறுவதற்குரிய உத்தரவுகளையும் ஆட்சியர் பிறப்பித்தார். இதற்கு பிருந்தாவின் தாய் சத்தியா கண்ணீர் மல்க ஆட்சியர் கற்பகம் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.