ஒடுகத்தூரில் அம்ருத் திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்ட அவலம்

ஒடுகத்தூரில் அம்ருத் திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்ட அவலம்

கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள்

ஒடுகத்தூர் பகுதியில் அம்ருத் திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். திறந்தவெளி கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அகரம்சேரி பாலாற்றில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்ல உலக வங்கியை பேரூராட்சி நிர்வாகம் நாடியது. அதன்படி, 1990-ம் ஆண்டு சுமார் ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பைப்புகள் மூலம் ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், கடந்த 34 ஆண்டுகளாக பூமியில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் வலுவிழந்து தற்போது ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு சீரான குடிநீர் வழங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அகரம்சேரி பாலாற்று நீரேற்றும் அறையில் இருந்து ஒடுகத்தூர் வரை தற்போது புதிய ராட்சத பைப்புகள் அமைக்க கடந்த 9 மாதத்திற்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதற்காக, ஆங்காங்கே குடிநீர் பைப்புகளை இறக்கி வைத்தனர். பின்னர், அகரம்சேரியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மட்டும் புதிய பைப்புகள் பதிக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 6 மாதமாக குழாய் பதிக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story