மூன்றே மாதம்தான் பயணியர் நிழற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது

மூன்றே மாதம்தான் பயணியர் நிழற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது

பெயர்ந்து விழுந்த கட்டிடம்

பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட பேருந்து நிழற்குடையின் மேற்பூச்சு மூன்றே மாதத்தில் விழுந்து சேதாரம் அடைந்தது.நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கசாமிகுளம் பகுதியில் செங்கல்பட்டு, வாலாஜாபாத் , தாம்பரம் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்காக ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒட்டி பேருந்து நிலைய நிழற் கூடம் கட்டப்பட்டது.

அந்த பேருந்து நிழற் கூடத்தில் பயணிகளுக்கு தேவையான மொபைல் சார்ஜர் வசதி , மின்விசிறி மற்றும் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர்களால் திறக்கப்பட்டது.

திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில் , இன்று காலை 11 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் உள்ள மேற்கூரை பூச்சு ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் அந்த நேரத்தில் நிழற்குடைக்குள் இல்லை. பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை. கட்டிமுடித்து மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில் இந்த கூரை எப்படி பெயர்ந்து விழுந்தது?

காண்டிராக்ட் விடப்பட்டு செய்யப்பட்ட வேலை என்றாலும் உரிய பொறியாளர் இந்த கட்டுமானத்தை பரிசோதனை செய்திருக்கவேண்டும். கட்டுமானம் சரியில்லாத காரணத்தால்தான் இப்படி பெயர்ந்து விழுகிறது.காண்டிராக்ட் எடுப்பவர்கள் பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்கள். மக்கள் உயிர் முக்கியம் அல்ல.

இந்த கட்டிடத்தை கட்டிமுடித்து பரிசோதனை செய்த பொறியாளருக்கு தேவையான கமிஷன் சென்று சேர்ந்துவிட்டதால் அவரும் இதை கண்டுகொள்ளவில்லை போலும் என்று இப்பகுதி மக்கள் பேசாத தொடங்கி உள்ளனர். இதைப்போன்ற சின்ன சின்ன விஷயங்கள் அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் என்பதை அரசு அதிகாரிகள் கவனத்தில்கொள்ளவேண்டும்.

மீண்டும் இதை முறையாக பூசி முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் கட்டிடங்களின் தரத்தை உறுதி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வை கொள்ளாததே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக உள்ளது.

Tags

Next Story