காலி பணியிடங்களை நிரப்ப கோரி ஜாக்டோ ஜியோ சாலை மறியல்
சாலை மறியல்
அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதன்படி சேலம் கோட்டை மைதானம் பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேரு தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகைைள வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் கூறுகையில்:- எங்களது நீண்ட நாள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும், மேலும் வருகிற 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்பது என்றும் மாவட்ட அளவில் 10-ந் தேதி வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும் 15-ந் தேதி அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் 26-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்துள்ளதாக கூறினர்.
இதற்கிடையே அப்பகுதியில் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.