தஞ்சாவூர் அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டி
தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 30 பேர் காயமடைந்தனர். லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்ற இவ்விழாவை, காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 652 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்துவிடப்பட்டன.
இக்காளைகளைப் பிடிக்க மொத்தம் 306 வீரர்கள் பதிவு செய்தனர். இவர்கள் 50 பேர் வீதம் களமிறக்கப்பட்டனர். குறிப்பிட்ட எல்லை வரை மாட்டைப் பிடித்து சென்றவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்து, அவர்களுக்கு சைக்கிள், பீரோ, சில்வர் பாத்திரம், மின் விசிறி, குத்துவிளக்கு, கட்டில், நாற்காலி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் பிடிபடவில்லை என்றால், அப்பரிசு மாட்டின் உரிமையாளருக்கு அளிக்கப்பட்டது.
இதனிடையே, வாடிவாசலிலிருந்து திறந்துவிடப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள கொட்டாம்பட்டியைச் சேர்ந்த சின்னதுரையின் காளை, வேலூர் தங்ககோயில் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனின் காளை உள்பட 3 காளைகளுக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. மாலை 4 மணி வரை நடைபெற்ற இப்போட்டியில் வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 30 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் பலத்த காயமடைந்த 19 பேர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மற்றவர்கள் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனர். இவ்விழாவில் அதிக அளவில் காளைகளைப் பிடித்த வீரரான தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டியைச் சேர்ந்த எக்ஸ்.ஆனந்துக்கு (22) எல்.இ.டி. டி.வி. பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளையாக ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த தாமஸின் காளை தேர்வு செய்யப்பட்டு, எல்.இ.டி. டி.வி. பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழாவில், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் செ.இலக்கியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.