துலுக்கன்குளத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே துலுக்கன் குளம் கிராமத்தில் முனியப்ப சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 306 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் வீரத்துடன் அடக்கினர். காளைகளை போட்டி போட்டுக் கொண்டு அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கு அடங்காமல் துள்ளிக்குதித்து ஓடிய காளை உரிமையாளர்களுக்கும் அண்டா, மின்விசிறி, நாற்காலி, குத்துவிளக்கு, ரொக்கப் பணம், டேபிள் சேர் என பல்வேறு வகையான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் முறையாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. துலுக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு திருச்சுழி டிஎஸ்பி தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.