நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டு கோலாகலம்

நிலவாரப்பட்டி இருசாயியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.மூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே நிலவாரப்பட்டி இருசாயியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 350-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.மூர்த்தி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், செல்வகணபதி, மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜல்லிக்கட்டில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதி மொழியினை மாடுபிடி வீரர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகே இதில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அங்கு தயாராக இருந்த மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் ஒரு சில காளைகள் மட்டும் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டது. பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் பரிசுகளை தட்டிச் சென்றது. ஜல்லிக்கட்டையொட்டி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story