பேராவூரணியில் ஜமாபந்தி நிறைவு - 67 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வருவாய் வட்டத்தில், வருவாய் தீர்ப்பாயம் பசலி 1433 கடந்த ஜூன் 13ஆம் தேதி தொடங்கியது. ஜூன் 14ஆம் தேதி குருவிக்கரம்பை சரக்கத்திற்கும், 18ஆம் தேதி ஆவணம் சரகத்திற்கும், 20ஆம் தேதி பேராவூரணி சரகத்திற்கும் கணக்குகள் தணிக்கை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்த வருவாய் தீர்வாயத்தில் மொத்தம் 456 மனுக்கள் பெறப்பட்டன. இதில் உடனடியாக 67 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
வருவாய்த் துறை அல்லாத பிற துறைகளுக்கான 44 மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 345 மனுக்கள் நிலுவையில் உள்ளது என கோட்டாட்சியர் தெரிவித்தார். இதையடுத்து மாலை குடிகள் மாநாடு நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ கலந்து கொண்டு, 39 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, 21 பேருக்கு உட்பிரிவுக்கான ஆணை மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக 7 பேருக்கு என அதற்கான ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தரணிகா, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாஸ்கர், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், மற்றும் மண்டல துணை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வருவாய் தீர்வாயத்தில், கோட்டாட்சியர் ஏற்பாட்டில் பயனாளிகள், பொதுமக்களுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.