செங்கல்பட்டில் ஜமாபந்தி: கலெக்டர் தலைமையில் நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மற்றும் வருவாய் தீா்வாய அலுவலா் ச.அருண்ராஜ் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.
மூன்றாம் நாள் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் காட்டாங்கொளத்தூா் உள்வட்டத்தில் உள்ள காயரம்பேடு, கூடலூா், பொத்தேரி, கோனாதி, தைலாவரம், வல்லாஞ்சேரி, காட்டாங்கொளத்தூா், நின்னக்கரை, கடம்பூா், களிவந்தப்பட்டு, பனங்கோட்டூா், பேரமனூா், சட்டமங்கலம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 200 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உடனடியாக தீா்வு காண அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஜமாபந்தியில் உடனடியாக தீா்வு காணப்பட்டு 21 நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மேலும், வேளாண்மைத் துறை சாா்பில், மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, வேளாண்மை இணை இயக்குநா் அசோக், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வெற்றிகுமாா், செங்கல்பட்டு வட்டாட்சியா் பூங்குழலி மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.