கைது செய்யப்பட்டவரை விடுவிக்க கோரி தீக்குளிக்க முயற்சித்தவரால் பரபரப்பு
தீக்குளிக்க முயற்சி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உடையார்பாளையத்தில் நடந்த கபடி போட்டியில் விதிகளை மீறி மைதானத்திற்குள் விளையாடச் சென்ற உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த பிரபு (45) மகன் ஸ்டீபன் (19) என்பவரை மைதானத்தை விட்டு வெளியே செல்லுமாறும் போட்டியை நடத்தும் முக்கியஸ்தரான பாலசுப்ரமணியம் என்பவர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்க மறுத்த ஸ்டீபன் பாலசுப்பிரமணியனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் ஸ்டீபன் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக உடையார்பாளையம் போலீசார் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது கழுவந்தோண்டி பைபாஸ் சாலை அருகே தனியார் கல்லூரி முன்பாக ஸ்டீபனின் தந்தை பிரபு மற்றும் ஜனா (20) உள்ளிட்ட உறவினர்கள் போலீஸ் வாகனத்தை இடையில் வழி மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தீக்குளிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.