குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி நகை திருட்டு- காவல்துறையினர் விசாரணை
காவல்துறை விசாரணை
வெண்ணாம்பட்டியில் குடிநீர் குழாய் பதிக்க அளவு எடுப்பதாக கூறி வீட்டில் இருந்த தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் - காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே பாரதமாதா தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் பட்டு வளர்ச்சித் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சாந்தி ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு பூஜா என்ற மகள் உள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டில் பூஜா மட்டும் இருந்துள்ளார். அப்போது அங்கு குடிநீர் குழாய் பதிப்பதற்கு அளவு எடுக்க வந்திருப்பதாக கூறி 2 பேர் வந்தனர். இதையடுத்து பூஜா அவர்களை அளவு எடுக்க அனுமதித்தார். அவர்கள் மாடிக்கு சென்று அளவு எடுத்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் பூஜா வீட்டில் இருந்த பீரோவை பார்த்த போது, உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே இருந்த 16 பவுன் நகையை குடிநீர் குழாய் பதிக்க வந்தவர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் தர்மபுரி B1 நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி நகை திருடிய 2 பேரை தேடிவருகின்றனர்.
Next Story