அடகு கடை உரிமையாளர் வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரத்தில் நகை அடகு கடை உரிமையாளர் வீட்டில் 125 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே அமைந்துள்ளது விளக்கடி கோவில் தெரு.இத்தெருவில் பி எம் மிட்டுலால் அண்டு கம்பெனி அடகு கடை மற்றும் தங்க மஹால் ஜூவல்லர்ஸ் கடையினை மகாவீர் என்பவர் நடத்தி வருகிறார்.இவருடைய தங்கமஹால் ஜூவல்லர்ஸ் கடைக்கு மேலே இவருடைய வீடும் உள்ளது .இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உறவினர்களின் திருமண நிகழ்வுக்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

நேற்று மாலை வீடு திரும்பிய பின்பு வீட்டின் கதவை திறக்க முயற்சித்துள்ளனர். கதவை திறக்க முடியவில்லை உள் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் மர வேலை செய்பவரை வரவைத்து கதவினை லாவகமாக உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 125 சவரன் தங்க நகை , ரொக்கப்பணம் ஒரு லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.

கொள்ளை சம்பவம் தொடர்பாக மகாவீர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் தகவல் அளித்ததை அடுத்து விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் பி எம் தங்க மஹால் ஜுவல்லர்ஸின் கடையின் மாடியில் உள்ள உரிமையாளரின் வீட்டிற்கு சென்று விசாரணை செய்தனர். உடனடியாக கைரேகை நிபுணர்கள் வர வைக்கப்பட்டு பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் இது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் முதல் கட்ட விசாரணையில் 125 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கம் ஒரு லட்சம் கொள்ளை போனதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tags

Next Story