தலைவாசல் அருகேவீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
தலைவாசல் அருகேவீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தலைவாசல் அருகே நத்தக்கரை கிராமத்தில் அம்பிகாபதி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன் மனைவி மாதேஸ்வரி (வயது 47). தியாகராஜன் வேளாண்துறையில் பணிபுரிந்த போது இறந்து விட்டார். மாதேஸ்வரி, அந்த பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். மகன் வெளிநாட்டில் படித்து வருகிறார். மகள் திருணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.மாதேஸ்வரி காலை 7.30 மணிக்கு கடைக்கு சென்று மாலை 7 மணிக்குதான் வீட்டுக்கு வருவது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் கடைக்கு சென்ற மாதேஸ்வரி வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம், 13½ பவுன் தங்க நகை ஆகியன காணாமல் போய் இருந்தது. தகவல் அறிந்த ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த மாதேஸ்வரி வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் உதவியுடன் வீட்டில் போலீசார் ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story