சாமி கழுத்தில் அணிந்திருந்த நகைகள் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது திரௌபதி அம்மன் கோவில். இக்கோவிலை வழக்கம் போல நேற்று இரவு கோயில் பூசாரி கொளஞ்சிநாதன் கோயிலை பூட்டிவிட்டு இன்று காலை கோவிலை திறக்க வந்துள்ளார்.அப்போது சாமியின் கழுத்தில் போடப்பட்டிருந்த சுமார் பத்து லட்சம் மதிப்பிலான தாலி செயின் தங்க காசு அடங்கிய 17 பவுன் செயின் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தனர் விசாரணையில் கோவிலை சுற்றி கம்பி வேலி போடப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் செல்வதற்காக போடப்பட்ட பைப் குழாயின் வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள் சாமியின் கழுத்தில் போடப்பட்டிருந்த நகையை திருடி சென்றிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது மேலும் மர்ம நபர்கள் குறித்து அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் கோயில் பூசாரிகளான முன்னாள் பூசாரி சிவக்குமார் மற்றும் தற்போதைய பூசாரி கொளஞ்சிநாதன் ஆகியோரிடம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். நகைகள் உண்மையாகவே குழாயின் வழியாக வந்த மர்ம நபர்கள் திருடி சென்றார்களா? அல்லது கோயில் பூசாரிகளே என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கோயில் திருட்டு சம்பவத்தால் மேல குடியிருப்பு கிராமவாசிகள் ஏராளமானோர் கோயிலை சுற்றி கூடியிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது