வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

குன்னூரில் வீட்டின் கதவை உடைத்து 5.75 பவுன் நகைகளை கொள்ளையடித்தவர்களை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு, பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (35). குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகத்தில் மதிப்பீட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தேயிலை வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்காக கடந்த 24-ம் தேதி சென்றார். சில காரணங்களால் கூட்டம் ரத்தானதால், குடும்பத்தினருடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் விவேக்கை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவேக் உடனடியாக அருவங்காடு விரைந்து வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க தகவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க வளையல், செயின், வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி கோப்பை உள்ளிட்டவைகள் என 5.75 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக விவேக், அருவங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். முதல் கட்டமாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story