வாணியம்பாடியில் போலி ஆணை மூலம் வேலை மோசடி: போலீசார் விசாரணை

வாணியம்பாடியில் போலி ஆணை மூலம் வேலை மோசடி:  போலீசார் விசாரணை

அலுவலகம்

வாணியம்பாடி நீர் பாசன துறை அலுவலகத்தில் போலி ஆணை மூலம் வேலைக்கு உத்தரவு வழங்கிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி - நியூடவுன் பயணியர் மாளிகை வளாகத்தில் பொதுப்பணித்துறை, நீர் பாசன பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இதில் பணி ஆய்வாளராக பத்மநாபன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வாணியம்பாடி - ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் காசிநாதன் என்பவர் தனது மகன் பூவராகவன் கல்லூரி படிப்பு முடித்து விட்டு வீட்டில் உள்ளதால் இவருக்கு அரசு வேலை வாங்க வேண்டும் என்று கருதி வாணியம்பாடியில் உள்ள பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அதிகாரி பத்மநாபன் என்பவரை அணுகியுள்ளார்.

அப்போது அவர் பொன்னையாறு உபகோட்ட பாசன பிரிவில் வேலை வாங்கி தருவதாக கூறி காசிநாதனிடம் ரூபாய் ஒரு லட்சம் பெற்று பின்னர் சில நாட்கள் கழித்து காட்பாடி நீர் பாசன அலுவலகத்தில் பணியில் சேர பணி உத்தரவு ஆணை வழங்கினார்.

பின்னர் அந்த ஆனையினை வாபஸ் பெற்று கொண்டு மீண்டும் ஆம்பூரில் உள்ள நீர் பாசன அலுவலகத்தில் பணியில் சேர பணி உத்தரவு ஆணை வழங்கி உள்ளார்.

மேலும், இதற்கு ஆதரவாக முதன்மை தலைமை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர், பொது அலுவலகம்,சேப்பாக்கம் சென்னை, செயல்முறை ஆணையினையும் பணியமர்வு செய்ய தரப்பட்ட உத்தரவு நகலினையும் வழங்கினார். இந்த ஆணையினை எடுத்துக்கொண்டு பணியில் சேர பூவராகவன் ஆம்பூர் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சென்று காண்பித்தபோது இது போலி ஆணை எனவும்,

இந்த உத்தரவினை கொடுத்த நபரை அழைத்துக்கொண்டு வரும்படியும் திருப்பி அனுப்பி விட்டனர். மேலும் அந்த அலுவலகத்தில் என்னை போலவே 15 நபர்களுக்கு போலி பணி ஆணை தரப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் போலி பணி ஆணை கொடுத்த பணி ஆய்வாளராக பத்மநாபன் என்பவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தற்போது இவர் தலைமறைவாகியுள்ளார். அலுவலக பணிக்கும் வருவதில்லை. நான் பணி ஓய்வு பெற்று, அதில் சேகரித்து வைத்து வந்த பணத்தை இவரிடம் கொடுத்து ஏமாந்து விட்டேன். என்னை திட்டமிட்டு ஏமாற்றி மோசடி செய்துள்ள, வாணியம்பாடி பொதுப்பணித்துறையில் பணியாற்றும் நபர் பத்மநாபன் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தன்னிடம் பெற்ற தொகையினை மீட்டு தர வேண்டும் என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.

Tags

Next Story