பணி பாதுகாப்பு சட்டம் தேவை: அரசு கொறடாவிடம் ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பணி பாதுகாப்பு சட்டம் தேவை: அரசு கொறடாவிடம் ஆசிரியர் சங்கம் கோரிக்கை
பள்ளி வேலை நேரத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரை, வகுப்பறைக்குள் புகுந்து, அரிவாளால் வெட்டியும், கொல்லவும் முயன்ற மாணவர்களைக் கைது செய்ததோடு, ஜாமினில் வெளிவரமுடியாதபடி நடவடிக்கை எடுப்பதுடன், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக அரசு கொறடா கோவி செழியனிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல் வந்த தமிழக அரசு சட்டசபை கொறடா கோவி செழியனை, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை பள்ளி வளாகத்திற்குள், இரண்டு மாணவர்கள் அரிவாளால் வெட்டியும், கொலை செய்யவும் துணிந்துள்ளனர். அரையாண்டுத் தேர்வு நாளை துவங்க உள்ள நிலையில், தேர்வுக்காக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, கண்டித்த ஆசிரியரை, பள்ளியிலேயே வகுப்பறைக்குள் வைத்து அரிவாளால் வெட்டியும், அவரைக் கொல்லவும் முயற்சி செய்த இரண்டு மாணவர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தர்களையும் கைது செய்ததோடு, அவர்கள் ஜாமினில் வெளிவராதபடி, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே, கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பள்ளியில், பணி நேரத்தில், ஆசிரியர்கள் வெளி நபர்களாலும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களாலும் தாக்கப்படும் நிகழ்ச்சி, தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அச்சத்துடன் ஒவ்வொரு நாளும் ஆசிரியப் பணியை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின் அச்சத்தைத் போக்க, தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனிதர்களின் உயிரை, உடலை நல்வழிப்படுத்தும் மருத்துவர்களுக்கு, மருத்துவமனைகளுக்கு தனியாக பணிப் பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் உள்ளது போல், வருங்கால சமுதாயமான, இளம் தலைமுறையினரான பள்ளி மாணவ, மாணவியரை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும், தனி பணிப் பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வரும், சட்டசபை கூட்டத் தொடரிலோ அல்லது உடனடியாகவோ, பள்ளி ஆசிரியர்களுக்கான தனி பணிப்பாதுகாப்பு சட்டத்தை, தமிழக முதல்வர் உடனடியாக இயற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
