திருவண்ணாமலையில் கால பைரவா் ஜெயந்தி விழா

காலபைரவர்
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி நாளில் காலாஷ்டமி அல்லது கால பைவரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலாஷ்டமி கொண்டாடப்பட்டது. கால பைரவர் வழிபாடு இந்தியாவில் மட்டுமின்றி நேபாளம் போன்ற நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கால பைரவர் பாவங்களை அழிக்கக் கூடியவர் என்பதால் எதிரிகள் தொல்லை, கர்ம வினைகளால் பாதிப்பு உள்ளவர்கள் என அனைவரும் பைரவரை வணங்குவர்.
கிழமைகளில் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கால பைரவர் வழிபாட்டிற்கு ஏற்ற நாட்களாகும். இந்த நாட்களில் வரும் ராகு காலத்தில் கால பைரவரை விளக்கேற்றி, மிளகு வடை மாலை சாற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். கால பைரவரின் அருளை பெறுவதற்காகவும், அவரது மனதை மகிழ செய்வதற்காகவும் கொண்டாடப்படும் நாளே காலாஷ்டமி நாளாகும். பைரவர் அல்லது கால பைரவரை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாக தேய்பிறை அஷ்டமி கருதப்படுகிறது. இந்த நாளில் பஞ்ச தீபங்கள் ஏற்றி வைத்து பைரவரை வழிபட்டால் காலத்தால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் கூட நீங்கி விடும் என்பது ஐதீகம்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த கால பைரவர் ஜெயந்தி விழா நேற்று அஷ்டமி தினமான நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பிரம்ம தீர்த்தம் அருகில் உள்ள காலபைரவர் சன்னதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாவதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கால பைரவா் ஜெயந்தியையொட்டி, வந்தவாசி சந்நிதி தெருவில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள கால பைரவா் சந்நிதியில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னா், கால பைரவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தாா்.
