கலைஞர் நூற்றாண்டு விழா : பள்ளி,கல்லூரிகளில் கருத்தரங்கம்

கலைஞர் நூற்றாண்டு விழா : பள்ளி,கல்லூரிகளில்  கருத்தரங்கம்
X
கலைஞர் நூற்றாண்டு விழா
விருதுநகர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு "சட்டமன்ற நாயகர் - கலைஞர்" குழுவின் சார்பில் பள்ளி,கல்லூரிகளில் கருத்தரங்கம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டத்தில், தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு "சட்டமன்ற நாயகர் - கலைஞர்" குழுவைச்சேர்ந்த சட்டமன்றப் பேரவையின் முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் , சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் மா.செல்வராஜ் மற்றும் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் பேசுகையில்: முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம்கள், கருத்தரங்கங்கள் ஆகியன மாநிலம் முழுவதும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென தமிழ்நாடு முதலமைச்சரால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுக்களில் ஒன்றான 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' என்ற குழு மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவுதலைமையில் மாண்புமிகு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, முன்னாள் சட்டமன்றப் பேரவைத் தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்ஃநாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் புகழுக்கு புகழ் சேர்க்கின்ற வகையிலும், இன்றைய இளம் தலைமுறையினர்களுக்கு கலைஞரின் பன்முகத்தன்மையை எடுத்துக்கூறும் வகையிலும், மேற்கண்ட ஒவ்வொரு குழுக்களின் சார்பிலும், பல்வேறு சிறப்புக்கள் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகள்ஃகல்லூரிகளில் “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்கினை நடத்திவருகிறது.

கலைஞர் மொழி, இனம், தமிழ் வளர்ச்சி ஆகியவைகளுக்கென தன்னை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர் ஆவார். உழைப்பில் அவருக்கு இணையானவர் அவரே ஆவார். கொள்கை பிடிப்புடன், தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்தவர். அவரது ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் திட்டங்கள் அடிப்படையில் கல்வி, பொருளாதாரம், வணிகம், விவசாயம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி ஆகிய நான்கையும் தனது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டவர் ஆவார். பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசின் பல்வேறு துறைகள் வாரியாக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களை பயன்பெற செய்வது மட்டுமன்றி, ஒவ்வொரு துறைக்கும் முழுமையான அதிகாரம் வழங்கி, சிறப்பான நிர்வாத்தையும் ஏற்படுத்தியவர் கலைஞர் ஆவார். அவ்வாறு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் அவ்வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதல்வரால் தற்போது செயல் படுத்தப்பட்டு வரும் புதிய மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாகவும், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து வருகிறது.

அதேபோல், பெண்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்ததும் கலைஞர் ஆட்சியில் தான். அன்றைக்கு பெண்களுக்கு 33 சதவீதம் உரிமை வழங்கியவர் கலைஞர். இன்று இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் பெண்களுக்கு வழங்கியவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அதுமட்டுமின்றி, தற்பொழுது கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் உயர்க்கல்வி பெற மிக பயனுள்ளதாக இருந்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக விழுக்காடு உயர்க்கல்வி பெற்று வரும் மாநிலமாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் தமிழக அரசின் திட்டங்கள் தான். ஐந்து முறை முதல்வராக இருந்தும், 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டும், 61 ஆண்டுகள் சட்டப்பேரவைக்கு சென்றும், மக்களுக்காக உழைத்த மாபெரும் தலைவர் ஆவார். அதேபோல் கலைஞர் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும், இன்று சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு, மக்களின் பொருளாதாரம் முன்னேற்றம் காண வழி வகிக்கிறது.

அந்த அளவிற்கு கலைஞரின் திட்டங்கள் அடித்தளமானதாக இருந்துள்ளது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படையாகவும் இக்கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை மாணாக்கர்கள் உள்வாங்கி வாழ்வில் வளம் பெற வேண்டும் என முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தெரிவித்தார். இக்கருத்தரங்கில் “நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது” என்ற தலைப்பின்கீழ் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். அவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story