கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: கூட்டுறவு மூலம் செயல்படுத்த கோரிக்கை
கலைஞர் கனவு வீடு திட்டம்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் ஊழியர் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளர் கே.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக 6 ஆண்டுகளில் 8 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தர உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக முதல் ஆண்டுக்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கிடு செய்துள்ளதாகவும் திட்ட மதிப்பீட்டிற்கும் அதிகமாக செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் ரூ.1 இலட்சம் வரை கடன் பெற்று கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.
ஆனால், ஏழை,எளிய நடுத்தர மக்களுக்கு நீண்டகால வீட்டுவசதி கடன்கள் வழங்குவதற்கென்றே பிரத்யேகமாக தமிழகம் முழுவதும் 650க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், குறுகிய கால மற்றும் மத்திய கால விவசாயக் கடன்கள் வழங்கும் மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு இத்திட்டத்தை ஒதுக்கீடு செய்துள்ளது மிகவும் வருந்ததக்கதாகும். ஏனெனில்,
வீட்டுவசதிக் கடன்கள் நீண்டகால தவணைகளை கொண்டதாக இருந்தால் மட்டுமே எளிய மக்கள் பயன் பெற முடியும். ஆனால், தற்போது கடனின் தவணை காலம் 3 முதல் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது பயனாளிகளுக்கு சிரமத்தை கொடுக்கும். எனவே, சுமார் 12 இலட்சம் வீடுகளுக்கு நீண்டகால கடன்கள் வழங்கிய அனுபவம் கொண்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கான கடன்கள் வழங்கப்பட்டால்,
இச்சங்கங்கள் புத்துயிர் பெறுவதோடு 5 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளமின்றி தவித்து வரும் ஆயிரக்கணக்கான பணியாளர்களும் மறு வாழ்வு பெறுவர் என்பதால், தமிழக அரசு இதற்கான ஆணைகளை பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.