களஞ்சேரி சீதாராமய்யர் தாக்குதல் - காவல் நிலையம் முற்றுகை

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டமைக்காக களஞ்சேரி சீதாராமய்யர் தாக்கப்பட்டதை கண்டித்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலைஞர் கிராமத்தில் சீதாராமய்யர் என்பவர் பக்தி மிகுந்து ஒழுக்க நெறிகளுடன் வாழவும் இறை பணி ஆற்றவும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்காக வேத பாடசாலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பாபநாசம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவரை சந்தித்து ஆசி பெற்றார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி மீது ஆர்வம் கொண்டவராகவும் இறைபக்தி மேலோங்க ஒழுக்க நெறிகளை பின்பற்ற இந்தியா வளர்ச்சி அடைய வேண்டுமாயானால் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் கூட்டணி கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கூறி சமூக வலைதளங்களில் ஆடியோ மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார் இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் நடை பயிற்சி மேற்கொண்ட போது சமூக விரோதிகள் அவரை கொலை வெறியோடு தாக்கினர். இச்செயல் குறித்தும் வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இதனையடுத்து நேற்று கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயண திருப்பதி பிரச்சாரம் மேற்கொண்டனர் அப்போது இது குறித்து நாராயண திருப்பதி பேசினார் இதுகுறித்து கேட்டறிந்த வேட்பாளர் ம.க‌. ஸ்டாலின் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு சமூகவிரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சீதாராமய்யர் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் இச்சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு எடுத்துரைத்தார் தொடர்ந்து சீதாராமையரிடம் ராமதாஸ் தொலைபேசி மூலம் எதற்கும் பயப்பட வேண்டாம் நாங்கள் இருக்கின்றோம் எனவும் உங்களுக்கு எந்த பிரச்சனையிருந்தாலும் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார் என்று ஆறுதல் கூறினார். பின்னர் இது குறித்து வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கூறுகையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் எங்களுக்காக சமூக வலைதளங்கள் வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீதாராமய்யர் தாக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது இச்ச சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளையும் அவர்களை தூண்டி விட்ட எந்த கட்சி இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் இச்சம்பவம் குறித்து இதுவரை தெரிந்திருந்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி அம்மாப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.

Tags

Next Story