காளியம்மன் கோவில் திருவிழா - தீ மிதித்து நேர்த்திக்கடன்

காளியம்மன் கோவில் திருவிழா -  தீ மிதித்து நேர்த்திக்கடன்
X

தீ மிதித்து நேர்த்தி கடன் 

சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் மற்றும் வழிவாய்க்கால் காளியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் மற்றும் வழிவாய்க்கால் காளியம்மன் கோவில்களில் தை மாத திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. திருவிழாவில் நேற்று காலை கோவில்களில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். பலர் நேர்த்திக்கடனாக உருளுதண்டம் போட்டனர். மேலும் பக்தர்கள் பலர் அலகுகுத்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதைத்தொடர்ந்து மாலையில் காளியம்மன் கோவில் திடலில் தீ மிதி விழா நடைபெற்றது.

இதில் ஆண்கள், பெண்கள் என பலர் நீண்ட வரிசையில் நின்று தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஆண்கள் சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீ மிதித்தனர். சில பக்தர்கள் சாமி வேடமணிந்தும், அலகு குத்தி தீச்சட்டி ஏந்தியும் தீ மிதித்தனர். இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா, திருவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு வாணவேடிக்கை, நையாண்டி மேளதாளத்துடன் சத்தாபரணம் நடக்கிறது.

Tags

Next Story