கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் : மேலும் 6 சாராய வியாபாரிகள் கைது

கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்புகள் : மேலும் 6 சாராய வியாபாரிகள் கைது

முக்கிய குற்றவாளி மாதேஷ்

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராய விற்ற வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று மேலும் 6 பேரை கைது செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 220 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். அதில், 57 பேர் இறந்தனர். இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., கூடுதல் எஸ்.பி., கோமதி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்த கருணாபுரம் கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜின் தம்பி தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களுக்கு மெத்தனால் விற்ற சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூர் ஜோசப்ராஜா ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். அதில், விழுப்புரத்தில் வசித்து வரும் புதுச்சேரி மாநிலம் மடுகரை வி.ஏ.எஸ்., நகரை சேர்ந்த மாதேஷ்,19; என்பவர் கள்ளக்குறிச்சி பகுதிக்கு மெத்தனால் விற்பனை செய்தது தெரிந்தது. இதற்கு உடந்தையாக மடுகரையை சேர்ந்த ஷாகுல்அமீது இருந்துள்ளார். மாதேஷ் சென்னையில் இருந்து 'மெத்தனால்' வாங்கி தியாகதுருகம் அடுத்த சூளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன், 44; கதிர் ஆகியோரது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் கள்ளக்குறிச்சி மெத்தனால் கலந்த கள்ளச்சாராய வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மாதேஷ், கண்ணன், ராமர், சென்னை சிவக்குமார், கதிர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முக்கிய குற்றவாளியான மாதேஷ் எந்தெந்த மாவட்டங்களில் மெத்தனால் விற்பனை செய்துள்ளார் என்பது குறித்தும், அவருக்கு சப்ளை செய்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.

Tags

Next Story