எதிர்கால பாதையினை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் - ஆட்சித்தலைவர் ச.உமா அறிவுரை

எதிர்கால பாதையினை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் - ஆட்சித்தலைவர் ச.உமா அறிவுரை

ஆட்சித்தலைவர் ச.உமா

வாய்ப்புகள் நிறைந்த இந்த உலகத்தில் தங்களுக்கான துறையை சரியான முறையில் தேர்வு செய்து அதில் முழு கவனம் செலுத்தி தங்களது எதிர்கால பாதையினை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சியில் ஆட்சித்தலைவர் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாச்சல் பாவை கல்லூரியில் இன்று (13.05.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 -ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவியர்களுக்கான கல்லூரி கனவு - 2024 நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தெரிவித்ததாவது: நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களை தனியார் பள்ளிக்கு இணையாக தன்னலமின்றி வழிநடத்தி செல்லும் ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 8,622 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 8,061 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கு ஒரு வாய்ப்பாக மறுத்தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு தேர்ச்சி பெற பயிற்சி வகுப்பு நடத்திட அனைத்து முன்னெடுப்புகளும் நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அந்த துறையை சிறப்பாக கவனம் செலுத்தி கல்வி பயில வேண்டும். மேலும் உயர்கல்வியோடு தங்களது தனித்திறமையினையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும். மாணவ செல்வங்கள் தங்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவ துறையை பொருத்தவரை எம்.பி.பி.எஸ் படிப்பு மட்டுமல்லாமல் மருத்துவ துணை படிப்புகளான நர்ஸ்சிங், லேப் டெக்னிசியன் உள்ளிட்ட படிப்புகளும் உள்ளன. அதே போன்று பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட துறைச் சார்ந்த கல்வியில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவ்வாறாக வாய்ப்புகள் நிறைந்த இந்த உலகத்தில் தங்களுக்கான துறையை சரியான முறையில் தேர்வு செய்து அதில் முழு கவனம் செலுத்தி தங்களது எதிர் கால பாதையினை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் உயர்கல்வியோடு தங்களின் திறன்களை மேம்படுத்திட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வருகிறது. உயர்கல்வி பயின்ற பிறகு அரசு வேலைக்கு காத்திருக்காமல் அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி சுய தொழில் தொடங்கி தொழில் முனைவோர்களாக முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புகளை படித்த இளைஞர்களுக்கு உருவாக்கிட இயலும். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இந்த நவீன கால கட்டத்தில் கைபேசியின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. மாணவ செல்வங்கள் கைபேசியினை கல்விக்கு உகந்த வகையில் நல்லதை மட்டும் எடுத்து கொண்டு கல்வியில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்தி பெற்றோருக்கு பெருமை சேர்த்திட வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் கட்டாயம் தங்களது உயர்கல்வியினை தொடர வேண்டும். இன்றைய தினம் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் இந்த முகாமினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்திலைவர் தெரிவித்தார். இன்று நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், பாராதியார் பல்கலைக்கழக உயர்கல்வி ஆலோசகர் திரு.சுப்பிரமணியன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் மரு.ஹரிராஜ், உயர்கல்வி வழிகாட்டி ஆலோசர் ஜெயபிரகாஷ் காந்தி, அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் வெஸ்லி, தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவகல்லூரி பேராசிரியர் முனைவர் எ.குமரவேல் ஆகியோர் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளையும், திருச்செங்கோடு வருவாய் கோட்டாசியர் சுகந்தி, திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் இமயவரம்பன் ஆகியோர் போட்டித்தேர்வுகள் குறித்தும் மாணவ செல்வங்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் இம்முகாமில் அரசு தொழில்பயிற்சி நிலையம், அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, பல்வேறு தனியார் கல்லூரிகள், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சி, அரசு துறையின் சார்பில் உயர்கல்வி திட்டங்கள் குறித்த அரங்குகள், சான்றிதழ்கள் பெறுவதற்காக அரசு இ - சேவை மையம் என மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுருந்தன. முன்னதாக, அரசு கல்வி நிறுவனங்கள், அரசுத்துறைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்ட உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகளை மாவட்ட ஆட்சித்திலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழிகாட்டி புத்தகத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி, பாவை கல்வி நிறுவன தலைவர் திரு.என்.நடராஜன் ஆகியோர் உட்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story